Poonool Magimai - By Mukkur Lakshmi Narasimhachariar in one of his Upanyasam
அடுத்த நாள் வரச் சொன்னது ஏன்?
உபநயனம் என்றால், 'கடவுளிடம் நெருங்கச் செய்தல்' என்று பொருள் (உப- அருகில்; நய- அழைத்துச் செல்லுதல்). 'வாமன அவதாரத்தில் பகவானுக்கு உபநயனம் நடைபெற்றது. சூரிய பகவான், வாமனருக்கு காயத்ரி மந்திரம் உபதேசிக்க, பார்வதிதேவி பிட்சை இட்டாள்' என்கிறது புராணம்.
அந்தணர்கள், மன்னர்கள், வணிகர்கள் முதலானவர்களுக்கும் உபநயனம் உண்டு என்கின்றன சாஸ்திரங்கள். உபநயனத்தின் அடையாளமாகத் திகழ்வது பூணூல்.
சுத்தமான பஞ்சில் இருந்து நூல் நூற்று, அதில் 96 இழைகள் சேர்த்து, வேத மந்திரம் ஜபித்து, பிராண பிரதிஷ்டை செய்து பூணூல் தயாரிக்க வேண்டும். அந்தக் காலத்தில் இப்படித்தான் பூணூல் தயாரித்தனராம்! இது, மிகக் கடினமான வேலை. இப்படித் தயார் செய்யும் பூணூலுக்கு 'யக்ஞோபவீதம்' என்று பெயர்.
'மனிதனாகப் பிறந்தவன் நாற்பது சம்ஸ்காரங்கள் செய்ய வேண்டும்; பெற்றோரை இழந்தவர்கள் செய்ய வேண்டியது தொண்ணூற்றிஆறு' என்கின்றன சாஸ்திரங்கள். இதனால், பூணூலுக்கு ஷண்ணவதி என்ற பெயரும் உண்டு. பூணூலின் 96 இழைகளும் மனிதனுக்கு, அவனது கடமைகளை நினைவுறுத்துகின்றன.
அந்தணர் ஒருவர், பூணூல் தயாரிக்கும் பணியை தவமாகவே செய்து வந்தார். தினமும் மந்திரம் ஜபித்து, நூலைத் திரித்து பூணூல் தயாரிப்பார். அதை இறைவனின் திருவடியில் வைத்து பூஜித்த பிறகு, ஓர் ஓலைப் பெட்டியில் பத்திரப்படுத்துவார். எவரேனும் பூணூல் கேட்டு வந்தால், அவர்களுக்கு பூணூல் தந்து, ஆசி வழங்குவது வழக்கம்.
ஒரு நாள் அவரின் மனைவி, ''ஸ்வாமி, நம் மகள் திருமண வயதை நெருங்கிவிட்டாள். இப்போதைய வருமானம், அன்றாட ஜீவனத்துக்கே போத வில்லை. எனவே, மன்னரிடம் சென்று ஏதேனும் பொருளுதவி பெற்று வாருங்கள்!'' என்றாள்.
அதன்படி அரண்மனைக்குச் சென்றார் அந்தணர். அனுதினமும் வேத சாஸ்திர முறைப்படி பூஜை- புனஸ்காரங்கள் செய்து வரும் அந்தணரின் தெய்வீக தோற்றத்தைக் கண்ட அவையினர், தங்களை அறியாமல் எழுந்து நின்று அவரை வரவேற்றனர்.
அவரை உபசரித்து அமரச் செய்த மன்னன், ''ஸ்வாமி, தங்களுக்கு என்ன வேண்டும்? தயங்காமல் கேளுங்கள்!'' என்றார்.
அந்தணர், இதுவரை எவரிடமும் எதுவும் யாசித்தது கிடையாது. எனவே, கூச்சத்துடனும் தயக்கத்துடனும் பேசினார்: ''மன்னா! என் மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும். என்னிடம் பூணூல் ஒன்று உள்ளது. அதைப் பெற்றுக் கொண்டு அதன் எடைக்குத் தக்கபடி, பொன்- பொருள் தந்து உதவ வேண்டும்!'' என்றார்.
மன்னருக்கு ஆச்சரியம்! 'திருமண வைபவத்துக்கு எவ்வளவு செலவாகும் என்பது கூட தெரியாமல் இருக்கிறாரே' என்று அந்தணரது அறியாமையை எண்ணி வருந்தியவர், ''அந்தணரே... வேறு எதுவும் வேண்டாமா?'' எனக் கேட்டார்.
''வேண்டாம் மன்னா!'' என்றார் அந்தணர். உடனடியாக தராசு ஒன்றை எடுத்து வரப் பணித்தார் மன்னர். அந்தணர், தனது பழைய ஓலைப் பெட்டியிலிருந்து பூணூலை எடுத்து, காயத்ரிதேவியை பிரார்த்தித்தபடி தராசுத் தட்டில் வைத்தார். மற்றொரு தட்டில் ஒரு காசை வைத்தார் மன்னர். ஆனால் பூணூல் வைக்கப்பட்ட தட்டு மேலே எழவே இல்லை!
மேலும் சில தங்கக் காசுகளை தராசுத் தட்டில் வைத்தார் மன்னர். எனினும் பூணூல் தட்டு தாழ்ந்தே இருந்தது. தொடர்ந்து, அரசு கஜானாவில் இருந்த பொன்- ஆபரணங்கள் அனைத்தையும் எடுத்து வந்து வைத்தும் கூட, தராசுத் தட்டுகள் சமமாக வில்லை! மன்னர் அதிர்ந்தார். செய்வதறியாது குழம்பினார்.
அப்போது, அந்தரங்க அமைச்சர் ஒருவர் எழுந்து வந்து மன்னரது காதில் ஏதோ சொல்லிச் சென்றார். இதையடுத்து, ''அந்தணரே! நாளை வந்து, பொன்னைப் பெற்றுச் செல்லுங்கள்'' என்றார் மன்னர்.
இப்போது, அந்தணருக்கு பயம் தொற்றிக் கொண்டது. 'தவறு செய்து விட்டோமோ... அரசர் தண்டிப்பாரோ?!' என்று நடுங்கினார். ஒன்றும் பேசாமல், தராசிலிருந்த பூணூலை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார்.
இன்னும் பயத்தில் இருந்து மீளாத அந்தணர், தனது நித்ய கர்மாக்களைக்கூட செய்ய மறந்தார். இரவில் தூக்கமின்றி தவித்தார்.
விடிந்தது! பீதியுடன் அரண்மனைக்கு ஓடினார் அந்தணர். மீண்டும் தராசு கொண்டு வரப்பட்டது. அந்தணர் பூணூலை ஒரு தட்டில் வைக்க, மற்றொரு தட்டில் ஒரேயரு காசை மட்டும் வைத்தார் மன்னர். அவ்வளவுதான்! பூணூல் தட்டு மேலே எழும்ப... இரு தட்டுகளும் சம நிலையில் நின்றன.
மன்னருக்கு ஆச்சரியம்! 'நேற்று சம நிலைக்கு வராத தராசுத் தட்டுகள், இப்போது எப்படி வந்தன?!' என்று வியந்தார். எனினும், தனது வியப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அந்தணருக்கு நிறையச் செல்வங்களை வாரி வழங்கினார். அந்தணர் நிறைந்த மனதுடன் கிளம்பிச் சென்றார்.
பிறகு, அமைச்சரை அழைத்த மன்னர், அவரிடமே விளக்கம் கேட்டார். அமைச்சரும் விவரித்தார்:
''மன்னா, இந்த அந்தணர் காயத்ரி ஜபத்துடன் நித்ய கர்மாக்களையும் பூஜை- வேள்விகளையும் அனு தினமும் தவறாமல் செய்து வருபவர். இதனால், அவரது பூணூலில் அளப்பரிய சக்தி நிரம்பியிருந்தது. எனவே, நேற்று எவ்வளவு பொன்- பொருள் வைத்தும் தராசுத் தட்டுகள் சம நிலை அடையவில்லை. ஆனால், 'இன்று போய் நாளை வாருங்கள்' என்று தாங்கள் கூறியதும் அதற்குக் காரணம் புரியாமல் குழம்பிய அந்தணர், காயத்ரி ஜபம் செய்யத் தவறினார். நித்ய அனுஷ்டானங்களையும் மறந்தார். இதனால், அவரது பூணூலின் சக்தி குறைந்து சாதாரண நூலாகி விட்டது. இன்று, தாங்கள் ஒரு காசை வைத்ததும் தராசுத் தட்டுகளும் சமமாயின!'' என்றார்.
இத்தனை பெருமைக்கு உரியது பூணூல்! காயத்ரி மந்திரத்தை நியமத்துடன் ஜபித்து வந்தால், யக்ஞோபவீதம் எனப்படும் பூணூலின் சக்திக்கு நிகரானது வேறு எதுவுமில்லை.